- எழுத்தாளர் லட்சுமி இன்று நினைவு தினம்.
லட்சுமி (மார்ச் 23, 1921 - ஜனவரி 7, 1987) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சமூகச் சிறுகதைகள், புதினங்கள் பெருமளவு எழுதியவர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் என்ற ஊரில் பிறந்தவர். பெற்றோர் இவருக்குப் இட்ட பெயர் திரிபுரசுந்தரி.
மருத்துவராகவும் தமிழ் இலக்கிய உலகில் தனி இடம் பெற்ற எழுத்தாளராகவும் திகழ்ந்த இவர் தமிழகம் மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவிலும் பல ஆண்டுகள் வாழ்ந்தவர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், சுமார் நூற்று ஐம்பது நாவல்கள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், ஆறு மருத்துவ நூல்கள் இவர் எழுதியவையாகும்.
பதவிகள் வகித்தாலும் பெண்ணுக்குச் சம உரிமை இல்லை; பெண்கள் சரி நிகர் சமான நிலை பெற வேண்டும் என்பதே இவருடைய எதிர்பார்ப்பு. இவருடைய எழுத்துக்களில் பெண் பிரச்சினை, உரிமையே மையக் கருத்து. பெண்ணின் பெருமை பேசுவதே, அருமை பாராட்டுவதே அடித்தளம். இல்லத்தின் உயிர் நாடியே பெண்தான் என்பது. குடும்பச் சிக்கல்களை அலசுவது. பெண்மையின் மென்மை உணர்வுகள்/ஆண்மையின் வன்மை உணர்ச்சிகள், இவற்றின் உரசல்களால் உருவாகும் நிகழ்ச்சிகளை தன்னுடைய எழுத்துக்களில் பின்னித் தந்தவர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
- மெல்லிசை மாமணி (Melody King) வி.குமார் மறைந்த நாளின்று.
இசையமைப்பாளர் வி.குமாரைப் (28-ஜுலை-1934 - 07-ஜனவரி-1996) பற்றி இந்த தலைமுறை இளைஞர்களுக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்காது. ஆனால் அவருடைய பாடல்கள் பலவற்றை, பலசமயங்களில் இசை நிகழ்ச்சிகளில் ரசித்திருப்பார்கள்.
இவரது பெற்றோர் வரதராஜு-தனபாக்கியம். 28.7.1934-இல் பிறந்தார். திரைத்துறைக்கு வருவதற்கு முன் தொலைபேசி இலாகாவில் பணியாற்றினார். இங்கு பணிபுரிந்து கொண்டிருக்கும்போதே இசைக்குழு அமைத்து இசைக்கச்சேரிகள் நடத்திவந்ததோடு நாடகங்களுக்கும் இசை அமைத்து வந்தார். இவர் இசை அமைத்த முதல் நாடகம் ‘கண் திறக்குமா”. பிறகு ஓ.எம்.ஐ.ஏ, விவேகா ஃபைன் ஆர்ட்ஸ், மற்றும் மணக்கால் மணி குழுவினரின் நாடகங்களுக்கு இசை அமைத்து வந்தார்.
நண்பர் மூலமாக ராகினி ரிக்ரியேசன்ஸ்-இல் கே.பாலசந்தரின் அறிமுகம் கிடைத்தது. ராகினி கிரியேசன்ஸின் ”வினோத ஒப்பந்தம்” என்ற நாடகத்திற்கு முதன்முதலாக இசை அமைத்தார். ராகினி ரிக்ரியேசன்ஸில் தொடர்ந்து இசை அமைத்து வந்தபோது, அதன் இயக்குநர் கே.பாலசந்தருக்குத் திரைப்படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. அப்படம் “நீர்க்குமிழி”.
வி.குமார் 1978-இல் இசையமைத்த ‘இவள் ஒரு சீதை’ என்ற படத்தில் பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு என்ற எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய நேயர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற பாடலைக் கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஐந்தே நிமிடங்களில் இவரது மெட்டுக்குப் பாடல் எழுதிக் கொடுத்தார்.
வி.குமாரின் மனைவி திருமதி.சொர்ணா. இவரும் ஒரு பாடகியாக அறிமுகமாகி வி,குமாருடன் ஏற்பட்ட காதல், திருமணத்தில் முடிந்தவுடன் பாடுவதை நிறுத்தியவர் .